Sunday 12 July 2020

பிரியாணி அரசியல் 2

மோகன் ஏற்கெனவே எதிர் ஹோட்டலில் வேலை செய்திருந்தமையால் அங்கு செய்த பிரியாணியைப் போல அதே தரத்துடனும் ருசியுடனும் விலை குறைவாகக் கொடுக்க முடிந்தது. 

எதிர் ஹோட்டலின் ஓனருக்குப் பழைய பிரச்சனையை விட இது பெரும் பிரச்சனையானது. பெரும்பாலானோர் ஒரே ருசியோடு விலைக்குறைவாக இருந்ததால் மோகனின் கடைக்கே சென்றனர். ஹோட்டலின் குளிர்சாதனம், வேலையாட்கள், இடத்திற்கான வாடகை, மின்கட்டணம் மற்றும் வரிகள் போன்றவற்றால் பிரியாணி மற்றும் மற்ற உணவுகளின் விலைகளைக் குறைக்கவே முடியவில்லை. ஆனால் மோகனுக்கு அப்படியல்ல. எண்பது ரூபாயில் முட்டை, பாசுமதி அரிசி, பெரிய அளவில் கோழி பீஸு என வட்டமாய் வெட்டிய வாழை இலையில் வெங்காயத்தயிர், சால்னா மற்றும் கடைசியில் கொஞ்சம் கேசரி எனக் கவரும் வகையில் விற்றான். ஏறக்குறைய ஒரு பிரியாணிக்கு ரூபாய் இருபது இலாபம். ஒரு நாளைக்கு ஐம்பது, அறுபது எண்ணிக்கையில் விற்றுக்கொண்டிருந்த பிரியாணி ஒரே வாரத்தில் எண்ணிக்கையில் நூறையும் தொட ஆரம்பித்தது. 

இரண்டாயிரம் ரூபாய் ஒரே நாளில்.. சரியான உழைப்பு, திட்டமிடல், தரம் போன்றவற்றால் பிரபலமாகத் தொடங்கினான்.

ஒருநாள் குடிக்காரன் ஒருவன் மோகன் கடையில் பிரியாணி தின்றுவிட்டு வாந்தியெடுத்து விட்டான். மோகனால் திடீரென சுத்தம் செய்ய முடியவில்லை. வந்தவர்கள் அசிங்கப்பட்டுக்கொண்டு சென்றுவிட்டனர். கூட்டமில்லாத போது மண்ணை அள்ளிப்போட்டு மூடினான். ஆனாலும் குடிக்காரன் அங்கயே உட்கார்ந்துக்கொண்டு திட்டிக்கொண்டிருந்தான். திடீரென தள்ளுவண்டியில் ஓங்கி அடித்தான். இதற்கு மேல் சரிப்பட்டு வராது எனப் போலீசுக்குப் போன் செய்தான் மோகன். பேசி முடித்துத் திரும்பிப் பார்த்ததும் குடிக்காரனைக் காணவில்லை. இதற்கெல்லாம் காரணம் ஹோட்டலின் ஓனர் என அப்போது அவனுக்குத் தெரியவில்லை.


வீட்டிற்கு சென்றவனுக்கு மனதளவில் வருத்தம். இப்படி நடந்து வியாபாரம் இல்லாமல் போய் விட்டதே என்று மனைவியிடம் சொன்னான். மோகனின் மகன் தமிழரசன் ஓர் உபாயம் சொல்லித்தந்தான். 

மறுநாள் வியாபாரம் செய்ய ஆரம்பித்த மோகனுக்கு அதே குடிக்காரன் வருவது தெரிய ஆரம்பித்தது. போனில் தனது மனைவிக்கு மெசேஜ் செய்தான். பிறகு போனில் கேமராவை ஆன் செய்து நடக்கும் காட்சியினைப் படம் பிடித்தான். குடிக்காரன் வந்து வாந்தியெடுத்துச் சண்டையிட ஆரம்பித்தபோது அதே சமயத்தில் போலீஸ்காரர் ஒருவர் அங்கு வந்தார். மோகனின் மனைவிதான் தகவல் சொல்லியிருந்தாள். போலீஸ்காரரைப் பார்த்ததும் ஓடிப்போனான் அவன். போனில் பார்த்த அவர் இவன் யார் என விசாரிக்க ஆரம்பிக்கிறேன் எனச் சொல்லி பிரியாணி ஒன்றை வாங்கிக்கொண்டுச் சென்றார். 


ஹோட்டல் ஓனருக்குத் தகவல் சென்றது. இனி நீ அங்குச் செல்லாதே எனப் போனில் குடிக்காரன் போல் நடித்தவனிடம் சொன்னார். ஆனாலும் கச்சிதமாகக் காய் நகர்த்திய மோகனின் மீது வெறுப்பு அதிகமானது.


மணிக்கு மோகன் சொன்னது ஞாபகம் வந்தது. "உன் நிலைமையில் நான் இருந்திருந்தால் ஹோட்டல் ஓனர் கூப்பிட்டதற்காக வேலைக்குச் செல்ல மாட்டேன்.. உன் வளர்ச்சியைத் தடுக்கத்தான் அதெல்லாம்".  

மணிக்கு அப்போதுதான் ஓர் உண்மையைப் புரிய ஆரம்பித்தது. அவன் நல்ல எண்ணத்தில் சொல்லவில்லை. ஆனாலும் நல்லதைதான் சொல்லியிருக்கிறான். விரோதி என்பதால் அறிவுரையாக ஏற்றுக்கொள்ளாமல் அலட்சியமாக இருந்துவிட்டோம். அறிவுரைச் சொன்னாலும் கேட்கமாட்டான் என உணர்ந்தே சொல்லியிருக்கிறான். 


தானும் பிரியாணிக் கடையை ஆரம்பிக்கலாமா? என்ற யோசனை அவனுக்குள் வர ஆரம்பித்தது. இருப்பினும் புலியைப் பார்த்துப் பூனை சூடுப்போட்ட கதையாகி விடக்கூடாது என்ற வாசகம் வந்துப்போனது.


மோகனின் வளர்ச்சியைப் பற்றி ஓனரின் காதில் விழும்படியே தன் கூட வேலை செய்யும் பணியாளர்களிடன் கூறினான். ஓனருக்கு கோபம் கூடுதலாகும் என்ற அவன் எண்ணம் நடந்தேறியது. மோகனின் கடையை ஒழிக்க ஓனர் சிந்திக்கத் தொடங்கினார்.

மணியின் வேலையில் அவ்ளோ திருப்தியில்லை என்றும் அவனை எடத்தெரு பிரிவுக்கு மாற்றிவிடுவதாகவும் உன்னை விட சிறந்த உழைப்பாளியைப் பார்த்ததில்லை எனவும் கடைசியில் ஏதோ கோபத்தில் வேலையிலிருந்து நீக்கியதற்காக மன்னிக்க வேண்டும் எனவும் தனக்குத் தானே சொல்லிப் பார்த்தார். நம்புவானா? தெரியவில்லை. ஆனால் தொழில் போட்டியில் வெல்ல அவனை விலைக்கு வாங்குவதுதான் சரி. விலை அதிகமாகவே இருக்கட்டும். அன்றே வாட்சப் ஓனரை வேலைக்கு அமர்த்தியிருந்தால் ஃபேஸ்புக்குக்கு செலவு மிச்சம். வேண்டாம் எனச் சொல்லித் தாமதமாக அவர் உருவாக்கிய வாட்சப்பை வாங்கியதால்தான் விலை அதிகம். ஆனாலும் வாங்கியது ஃபேஸ்புக்தானே. திறமையை இழுப்பதும் வெற்றிதான். ஆனால் நம்பும்படி பேசவேண்டும் என்ற யோசனை அதிகரித்தது.
 

ஓரிரு நாளில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக செய்தி வெளியானது. காலம் கருதினால் ஞாலம் கைக்கூடும் என்பது போல் மழைப்பெய்யும் காலத்திற்காகத்தான் காத்திருந்தார் ஓனர்.


//காலம் கைக்கூடியதா? மணி என்ன செய்தான்? மோகன் வேலைக்குச் சேர்ந்தானா? - பிரியாணி அரசியல் தொடரும்....//



No comments:

Post a Comment