Sunday, 12 July 2020
பிரியாணி அரசியல் 2
Friday, 10 July 2020
பிரியாணி அரசியல்
மணியும் மோகனும் பக்கத்து வீட்டுக்காரர்கள். இருவரும் பால்யத்தில் ஒன்றாய்ப் பழகிய நண்பர்கள். இருவரும் இப்பொழுது பேசிக்கொள்வது கூட கிடையாது.
பக்கத்து வீடு என்றாலே நாட்டில் பாதிப் பேருக்குப் பேச்சு வார்த்தையே இருக்காது. ஒரு காலத்தில் இருவீட்டுக்காரர்களும் அவ்வளவு அந்நியோன்யமாய்ப் பழகியிருந்திருப்பார்கள். ஒரு வீட்டு சமையல் கூட இரு வீட்டிற்கும் சேர்த்து சமைத்திருப்பார்கள். பிள்ளைகளும் தங்கள் வீட்டை விட பக்கத்து வீட்டிலேயே முக்கால்வாசி நேரங்களைச் செலவிட்டிருப்பர்.
மணிக்கு ஒரு மகன். பெயர் வேலன். ஆறாம் வகுப்பு. மோகனுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் தமிழரசன். எட்டாம் வகுப்பு. இளையவள் தேவி. ஆறாம் வகுப்பு. மூவரும் அங்குள்ள அரசுப்பள்ளியில் படிக்கிறார்கள். பள்ளியில் வேலனும் தேவியும் ஒரே வகுப்பு.
இருவரின் மனைவியும் வாரம் ஒருமுறை வாய்ச்சண்டை இழுத்து கூச்சலிட்டுக் கொண்டிருப்பர். ஒற்றுமையாய் இருந்த மணியும் மோகனும் பேசிக்கொள்ள மாட்டார்களே தவிர இருவருக்கும் நேரடிச் சண்டை இருந்தது இல்லை.
வேலைத் தேட ஆரம்பித்த காலத்தில் இருவரும் ஒன்றாய்ச் சேர்ந்து தேவன் என்ற சமையல் காண்டிராக்டரிடம் வேலை செய்துக்கொண்டிருந்தனர். ஊரில் எந்த விசேஷம் என்றாலும் தேவன்தான் சமையல். ஊர் எல்லை வரைக்கும் சைவம், அசைவம் இரண்டும் மணக்கும். சமையலில் அடித்துக் கொள்ளவே முடியாத கெட்டிக்காரர். மணி, மோகன், முத்தம்மா, கலா, பாரி, ராஜூ என ஆறு பேரை மட்டும் வேலைக்கு வைத்திருந்தார். சமையல் முதல் பந்தி வரை அந்த ஆறு பேருமே பொறுப்பு. இவர் அரைக்கும் மசாலாக்களின் வாசம் நாவில் எச்சில் வரவைக்கும். அதிலும் ஒருமுறை கடாவெட்டுத் திருவிழாவில் இவர் செய்த ஆட்டுக்கறி குழம்பை வீட்டில் செய்யச் சொல்லி மனைவியிடம் கேட்டுக்கொண்டோர் அதிகமுண்டு. பெண்களே அதுப்போல் செய்ய ஏகப் பிரயத்தனங்கள் செய்ததுண்டு.
ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன்பாக கேட்டரிங் சர்வீஸ் எட்டிப்பார்க்க ஆரம்பித்த பின்னும் இவரது மதிப்புத் துளியும் குறையவில்லை. மோகனும் மணியும் பிரியப்போகும் நேரம் ஆரம்பமாகியது. அன்றொருநாள் மாரடைப்பில் தேவன் இறந்துப்போனார். ஒரிரு வாரங்களுக்குப் பிறகு சமையலை யார் முன்னின்று செய்வது என பேச்சு ஆரம்பித்தது. இருவரும் விட்டுத்தராததால் ஆளுக்கொரு திசையாய்ப் பிரிந்தனர். இருவரும் பிரிந்ததால் ஊர்க்காரர்களும் யூனிஃபார்மில் வேலை செய்யும் உயர்ரக கேட்டரிங் பக்கம் போயினர். மணி மற்ற சிலரைக் கொண்டு சமையல் காண்டிராக்ட் செய்ய ஆரம்பித்தார். இருப்பினும் பழைய பெயர் இல்லாததால் அவ்வப்போது காண்டிராக்ட் கிடைப்பதே அரிதானது. பாரியும் ராஜூவும் சில நாள் கழித்து சென்னைக்குச் செல்வதாகச் சொல்லி வேலையிலிருந்து விலகிக்கொண்டனர். முத்தம்மாவும் கலாவும் ஒரு கேட்டரிங்கில் சம்பளம் அதிகம் என சேர்ந்துக்கொண்டனர். மோகனும் மணியும் பரம எதிரிகளாகினர். "என் பேச்சைக் கேட்ருந்தா... "என இருவரும் தங்களுக்குள்ளே ஆத்திரத்தை வளர்த்துக் கொண்டிருந்தனர்.
இதுபோதாதா.. இருவர் மனைவிக்கும். வீடுகளின் கொல்லைப்புறத்திலும் வாசல் கூட்டும்போதும் கழுத்து சுளிக்கும் அளவுக்கு 'ம்க்கும்..' என ஒருவரையொருவர் பார்த்துத் திரும்பிக்கொள்வர். பிள்ளைகளும் விளையாட்டிற்குக்கூட தெருவில் ஒன்று சேர்ந்து விளையாடுவதை விட்டு விட்டனர். ஆனால் பள்ளிக்கூடத்தில் இருவீட்டுப் பெற்றோருக்கும் தெரியாமல் அவர்களின் நட்பு தொடர்ந்தது.
மணி தள்ளுவண்டியில் பிரியாணி செய்து ஊரின் பேருந்து நிலைய வாயிலில் விற்க ஆரம்பித்தார். மோகன் சில காலம் ஏதேதோ வேலைகள் செய்து பின்பு ஒரு பெயர்ப்பெற்ற அசைவ ஹோட்டலில் சமையல்காரன் ஆனார்.
ஒருநாள் பள்ளியின் உணவு இடைவேளையில்.. "போட்டி எங்கெல்லாம் வருது பாரேன்.. யாரு ஓனருங்றதுலதான் நம்ம அப்பாக்குள்ள சண்டை. சண்டைங்றத விட போட்டி மனப்பான்மை" என்றான் மோகன் மகன் தமிழரசன்.
"ஆமாம்.. இங்கன மட்டும் என்ன உன்னய மாதிரி படிச்சி ஃபர்ஸ்ட் ராங் வரலனு எங்கம்மா திட்றாங்க" என மோகன் மகள் தேவியைப் பார்த்து சொன்னான் மணி மகன் வேலன்.
"போட்டி இல்லாத இடமே இல்ல போல. குப்பை கொஞ்சூண்டு காத்துல வந்ததுக்கே அன்னக்கி ரெண்டு வூட்லயும் சண்டை. இன்னக்கிம் காலைல பாத்திரம் கழுவுன தண்ணீ அந்தாண்ட வந்துட்டுனு சண்டை" என வசனம் பேசிய தேவி உடனே வேலனின் டிபன் பாக்ஸைப் பார்த்து "ஓ.. பிரியாணியா?" என்றாள்.
"ஆமாம். அப்பா மதியம் விக்குறதக்கு செய்வாங்கல. அதை அப்படியே இந்தப் பக்கம் தள்ளிட்டு போறச்ச எனக்கும் கொடுத்துடுவாங்க. இனி நெனச்சப்பலாம் பிரியாணிதான். ஸ்கூல் சாப்பாடுலம் எப்பவாச்சும்தான்" என்றான்.
"எங்கப்பா ஹோட்டல்ல மீந்துப்போகறப்ப வெரைட்டியா எடுத்துட்டு நைட்டு வருவாங்க. நாங்களும் நேத்து நைட்டு பிரியாணி சாப்பிட்டோமே" என்றாள் தேவி.
அதைக்கேட்டு வேலன் சிரித்தப்படியே "சூடா சாப்பிடற விட்டுட்டு மீந்துப்போறதை.." என்றவன் தமிழரசன் முறைப்பதைப் பார்த்ததும் "இந்தா பிரியாணி" என ஒரு கைப்பிடி வைத்தான். "ஆஹா சூடா நல்லாருக்கே என்றான்" தமிழரசன் கூடவே தேவியும்.
மாலை வேளையில் பள்ளியிலிருந்து வந்துக் கொண்டிருந்த இருவரும் இனிமே அப்பா எடுத்துட்டு வரத சூடு செஞ்சி தரச் சொல்லணும் என முடிவெடுத்தனர்.
மணியின் பிரியாணி வியாபாரம் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆனால் நன்றாக இருப்பதாகச் சில வாடிக்கையாளர்கள் கருத்துத் தெரிவித்தனர். அதில் ஒருத்தன் "இங்கிட்டு விற்கிறதுக்கு அந்த முனையில ஒரு ஹோட்டல் இருக்குல. உன் கடை பிரபலமாகனுன்னா அங்கிட்டு எதிர்ல வித்தேனா விலையும் கம்மி. நல்லாவும் இருக்குனு நிறையப் பேர் ஹோட்டல் வர்றவங்க வாங்க ஆரம்பிப்பாங்க" என்றான்.
மணிக்கும் அது நல்ல ஐடியாவாகத் தோன்ற அடுத்தநாள் தள்ளுவண்டியை அந்த ஹோட்டலுக்கு எதிரில் உள்ள மரத்தடியில் நிப்பாட்டி வியாபாரம் செய்தான். ஹோட்டலுக்கு வந்த இளைஞர்கள் சிலர் அங்க ட்ரை செய்யலாமா என ஹோட்டல் வாசலில் பேசிவிட்டு தள்ளுவண்டி கடைக்கு வந்தனர். அது வரையிலும் எதிர் தள்ளுவண்டியைப் போட்டியாக நினைக்காத அந்த ஹோட்டல் காசாளர் விடயத்தை ஓனருக்கு எடுத்துச் சென்றார். அந்த ஹோட்டலில்தான் மோகனும் ஒரு சமையல்காரர்.
ஓனர், மோகன், காசாளர் மூவரும் கண்ணாடியின் அந்த வழியே மணியின் தள்ளுவண்டியைப் பார்த்தனர். "ஓ.. இவனா? அங்க வித்துட்ருந்தவன் இங்க வந்துட்டான்?" என்றான் மோகன்.
"உனக்கு அவனைத் தெரியுமா?" என்றார் ஓனர்.
"ஆரம்பத்துலருந்து ரெண்டு பேரும் ஒண்ணா சமையல் வேலைக் கத்துக்கிட்டோம். பிறகு பிரிஞ்சிட்டோம். திமிரு புடிச்சவன். என்ன சொன்னாலும் கேட்டுத் தொலைய மாட்டான்"
"அப்போ இங்க கடைப் போடாதனு சொன்னா கேட்க மாட்டான். அப்படிதானே"
பெரிய அளவில் வியாபாரம் பாதிக்கப்படவில்லை என்றாலும் எதிரிலேயே கடை என்பது ஓனருக்குச் சற்றும் பிடிக்கவில்லை.
"நிச்சயமா.. ஆரம்பத்துல வீட்டு வாசல்ல வித்துட்ருந்தான். அப்புறம் பஸ் ஸ்டாண்ட் வாசல்ல. இப்போ இங்க வந்துட்டான். மரத்தோட நிழலு நல்லா வசதியா இருக்க கடைய விரிச்சிட்டான். மூணு கிலோமீட்டர் தள்ளிட்டே வந்துறான் நிழலுக்காவே போல"
அதைக் கேட்ட ஓனர் சற்று யோசித்தபடியே "அப்படின்னா ஒண்ணு செய்.. ஈ.பிக்கு போன் செஞ்சி எதிர்ல உள்ள மரத்தோட கிளையால கரண்ட் அப்பப்ப போகுதுனு சொல்லு"
"நம்புவாங்களா?"
"சொன்னதை செய்" என்றவர் காசாளரிடம் "இருநூறு ரூபா குடுத்திட்டு மரத்தோட கிளைய வெட்டச் சொல்லிச் சொல்லிடு. அதால இல்லனு சொன்னா ஐநூறு கொடு.. வேற பேச்சு இருக்காது" என்றார்.
மறுநாள் வந்த மணிக்குப் பேரதிர்ச்சி. மரக்கிளைகள் நன்கு வெட்டப்பட்டிருந்தது. விசாரித்ததில் ஈ.பிக்காக என்றார் அவ்வழியே சென்ற ஒருவர். "வெயில்ல எப்படி?.. நாம நின்னாலும் சாப்பிட வர்றவங்க? " இருந்தாலும் வேறு வழியின்றி வியாபாரம் ஆரம்பித்தார். வழக்கமாய் வருபவர்கள் கூட வெயில்ல எங்கிட்டு நின்னுட்டுச் சாப்பிடுறது எனத் திரும்பி போயினர்.
ஹோட்டலில் நின்று அனைத்து ஊழியர்களும் சுவாரசியமாய்ப் பார்த்து மகிழ்ந்தனர்.
வெயிலில் நின்று யோசித்ததில் ஒன்றும் புரியவில்லை. மன வருத்ததோடு திரும்பினார் மணி.
அடுத்தநாள் வரமாட்டான் என மோகன் நினைத்தான். ஆனால் பிரியாணி செய்வதையும் தள்ளுவண்டி புறப்படுவதையும் மோகனுக்குத் தெரிவித்தாள் அவன் மனைவி. அவ்வப்போது வரும் அப்டேடுக்களை ஓனரிடம் சொல்லிக் கொண்டிருந்தான் மோகன்.
தள்ளுவண்டி தள்ளி வந்த மணி தார்ப்பாய் போன்ற பெரிய துணியைத் தள்ளுவண்டியின் பின்னாலும் பின்னாலும் ஊன்றுகோலால் நிப்பாட்டி விசாலமாகக் காற்றில் விழாதப்படி மரத்தோடு இறுக்கிக் கட்டினான். அவன் மனசுக்கு அப்போதுதான் நிழல் வந்தது. ஆனால் மோகனுக்கும் ஓனருக்கும் கோபம் தலைக்கேறியது.
"நீங்க போயி.. நம்ம எடத்தெருவுல ஆரம்பிக்கப்போற கடைக்கு சமையல்காரரா வர்றானானு அவண்ட்ட கேளு. சம்பளம் பதினைந்தாயிரம்னு சொல்லு"
அந்த வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில் மோகனுக்கு வாய்த் திக்குமுக்காடியது. நமக்குப் போட்டியா இவனா? வேற வேற இடம்னாலும் சரிவராது என யோசித்தான். "தான் கேட்டுச் சொல்லட்டுமா?" என்றான்.
"என்ன திடீர்னு?"
"நம்ம ஹோட்டல்லருந்து கேட்டா நம்மளவிட நல்லா சமைக்கிறோம்ங்ற எண்ணம் அவனுக்கு வந்துடும். அப்பறம் திமிரா ஒத்துக்க மாட்டான். அதான்"
"இல்ல வேணாம். நானே கேட்கிறேன்" என்ற ஓனர் அங்கிருந்து எதிர் தள்ளுவண்டி கடைக்குச் சென்று மணியிடம் புதிதான கிளைக்குச் சமையல் காரரைத் தேடுவதாகவும் சம்பள விவரத்தையும் அவன் பிரியாணியை ஒருமுறை தன் ஊழியர்களால் வாங்கி வரச் செய்து ருசிப் பார்த்ததையும் சொன்னார்.
"சார் வீட்ல கேட்டுட்டு நாளைக்குச் சொல்லட்டுமா?" என்ற மணிக்கு உள்ளுக்குள் சந்தோஷம் இருந்தது. இப்படி தள்ளுவண்டியில் பொழப்பு நடத்துவதை விட ஹோட்டலில் அதுவும் வியாபாரம் ஆனாலும் ஆகாட்டாலும் மாதம் சம்பளம் என்ற நினைப்பே வந்தது.
"உன் விருப்பம்" எனச் சொல்லிவிட்டுச் சென்றார். இருப்பினும் வழிக்கு வந்திடுவான் என்ற எதிர்ப்பார்ப்பு அவரிடம் முழுவதும் இருந்தது.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த மோகனுக்கு ஆத்திரம் சூழ்ந்தது. அன்றிரவு வீட்டு வாசலில் நின்ற மணியிடம் சென்றான் மோகன்.
"உண்ட்ட இவ்ளோ வருசம் கழிச்சிப் பேசறேன். நமக்குள்ள என்னதான் விரிசல் இருந்தாலும் ஓர் உண்மைய சொல்லணும்னுதான் சொல்றேன்" என்றான் மோகன்.
"என்ன? தானா வந்து பேசுறான்? எதையோ கெடுக்க வந்திருக்கானோ"னு அவனைப் பார்த்து "என்ன?" என்றான் மணி.
"உன் வளர்ச்சிப் பொறுக்காமதான் என் ஓனரு இப்படி உன்னைக் கூப்பிடுறார். மரக்கிளைய வெட்டுனதே அவருதான். உன்னைக் கூப்டுக்கிட்டாதான் நல்லதுனு கேட்குறாரு. உன் நிலைல நான் இருந்தா ஒத்துக்கவே மாட்டேன்" எனச் சொல்லிவிட்டு கிளம்பினான்.
அவன் சொல்லி கிளம்பியதும் மணிக்கு ஏக சந்தோஷம்.
மறுநாள் ஓனருக்குத் தொலை பேசியில் அழைத்தவன் தன் வியாபாரத்தை வீணாக்க மரக்கிளையை வெட்ட சொன்னதை மோகன் சொன்னதாகவும் இப்போது அழைப்பதும் தங்கள் ஹோட்டல் நல்லதுக்காகதான் எனச் சொன்னதையும் சொல்லி இருப்பினும் தங்கள் வார்த்தையை நம்புவதாகவும் சமையல்காரராகச் சேர்வதாகவும் மோகன் தந்திரக்காரன் எனவும் சொல்லி வைத்தான்.
"ஆஹா.. வேலையும் கிடைச்சுட்டு. அவனுக்கு வேட்டும் வச்சாச்சு" என மகிழ்ந்தான் மணி.
போன் வைத்த மாத்திரத்தில் மோகனுக்கு அழைத்த ஓனர் தன்னைப் பற்றிய உண்மையைச் சொன்னதற்காகவும் இனி ஹோட்டலில் வேலையில்லை என்பதையும் சொல்லிவிட்டு வைத்தார். மோகன் மணியால் வேலையிழந்ததை தன் மனைவியிடம் சொன்னான். மோகன் மனைவி பக்கத்து வீட்டோடு சண்டையிட ஆயத்தமானாள்.
அதற்குள்ளாக மணிக்கு அழைத்த ஓனர் புதுக்கிளை துவங்கும் வரை தற்போதைய ஹோட்டலில் இன்றுமுதல் வேலை செய்ய சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார். மணி சந்தோஷத்தில் குதித்தான்.
மோகன் தன் மனைவியிடம் "தோற்றுவிட்டோம் ஆனாலும் ஜெயிப்போம்.. சண்டையிடாதே!" என்றான்.
மணி அன்றைய தினம் ஹோட்டலுக்கு வேலைக்குச் சென்றான்.
அதற்கடுத்த நாள் பள்ளிக்கூடத்தில் தேவி வேலனிடம் "இனி சூடான பிரியாணிதான் எங்களுக்கு.. உனக்கு
இனிமே ஆறிப்போன வெரைட்டிதான்" என்றாள்.
மோகன் தள்ளுவண்டியோடு ஹோட்டலின் எதிர்முனையில் பிரியாணி விற்க ஆரம்பித்திருந்தான்...
(பிரியாணி அரசியல் தொடரும்)