"கொரானா ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுச்சி இருக்குற வேலை போய்டும் போல" தனக்குள்ளே நொந்துக்கொண்டார் துணிக்கடையில் சேல்ஸ்மேனாகப் பணிபுரியும் தங்கசாமி.
கிட்டத்தட்ட இருபத்தஞ்சு வயசு இருக்கும்போது செய்யாத தொழில் இல்லை. மாடு மேய்ப்பது, பொருட்கள் வாங்கிட்டு வர்றதுனு ஒரு மாடி வீட்டுக்கு வேலையாளா இல்ல மாட்டுக்கு வேலையாளானு தெரியாம வேலை செஞ்சிட்ருந்த சமயத்துலயே காமாட்சியைத் தங்கசாமிக்குக் கட்டிக் கொடுத்திருந்தாங்க.
காமாட்சி நல்ல குணவதி. தங்கசாமி தரும் இருபது முப்பது ரூபாயில் மணவாழ்வின் ஆரம்பத்தில் குடும்பம் நடத்தியவள் இப்போது நாளொன்றுக்குத் தரும் இருநூற்றைம்பைதையும் அதே சிக்கனத்தோடு குடும்பம் நடத்தும் அதிசயப்பிறவி. கணவனின் குடிப்பழக்கத்தை விடுவதற்கு தற்கொலை செஞ்சிக்கற விளிம்புநிலை வரை சென்றவள். சிக்கனமும் அதிகம் ஆசையுமில்லாத கிராமத்துக் கிழவி. ஆம்.. இப்போது அறுபது வயதைத் தொட்டிருக்கும். ஊர் எல்லையில் உள்ள ஆலமரத்தின் பின்புறம் ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்து வந்திருந்தனர்.
தற்போது ஊரின் ஆலமரம் வெட்டப்பட்டு பாலம் கட்டப்பட்டு சாலைகள் போடப்பட்டு என ஏகப்பட்ட மாற்றங்கள். ஊரில் உள்ளவர்கள் கூட ஓட்டு வீடு, மாடி வீடு என அவரவர் பொருளாதாரத்திற்கு ஏற்ப கட்டியிருந்தனர். ஆனால் இன்றும் தங்கசாமி வீடு இருவரும் தங்க போதுமான வசதி உள்ள வீடுதான்.
இவர்களது ஒரே மகள் சீதாவைத் தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் முருகனுக்குக் கட்டிக் கொடுத்திருந்தனர். அவளுக்கு இரு பிள்ளைகள். ஏறக்குறைய எண்பது மைல் தொலைவில் இருக்கும் நகரமொன்றில் இருக்கிறாள். வருடத்திற்கு ஒருமுறை வந்துவிட்டுச் செல்வாள். தங்கப் போதுமான இடமில்லை என முருகன் வருவதேயில்லை. பேரப்பிள்ளைகளை மூன்று மாதத்திற்கொருமுறை போய் இருவரும் பார்த்துவிட்டு வருவர். கடைசியாகப் பொங்கலுக்குப் போய் சீர் தந்தப்பிறகு இன்னமும் போகவில்லை. போனிருந்தாலும் பேலன்ஸ் இருப்பதேயில்லை. இன்கமிங் ஒன்லி. எப்பவாவது பேசத் தோன்றினால் துணிக்கடையின் ஓனரிடம் நம்பர் போடச் சொல்லிப் பேசி மகிழ்வார். ஓனர் ரவியும் இவரது ஏழ்மையைக் கருத்தில் கொண்டு வேலையில் வைத்திருந்தார்.
முதல் லாக்டவுனில் சேமித்திருந்த ஆயிரத்து எழுநூறையும் இருப்பத்தோரு நாளைக்கு செலவு செஞ்சாச்சி. இனி அடுத்த பத்தொன்பது நாளை எப்படி சமாளிக்கிறதுனு தெரில. ஒரு எட்டுப் போய் பார்த்துட்டு வாரேன் என ஓனரிடம் சென்றவரிடம் "எனக்கும் உன் நிலைமைதான் சாமி. எல்லாம் சரியானதும் பார்ப்போம்" எனச் சொல்லி ஐநூறு தந்திருந்தார் ரவி.
போன வாரம் அழைத்த சீதா தன்னால் சமாளிக்கமுடியல ஏதாச்சும் செய்ப்பானு சொன்னதும் தன்னால முடியாத வருத்தத்தில் ஓனரிடம் கேட்டுச் சொல்வதாகச் சொல்லியிருந்தார்.
மிளகளவு இருந்த தங்கமும் அடமானத்தில் இருக்கிறது. கடன் என்று கேட்டால் இந்தச் சூழ்நிலையில் யாரும் தரமாட்டார்கள் என்ற நிஜம் கடன் கேட்கும் எண்ணத்தைத் தடை செய்திருந்தது.
எப்போது மே3 முடியும். வேலைக்குச் செல்வோம் என்ற மனநிலையில் இருந்தவருக்கு அடுத்தப் பேரிடியாக மூன்றாவது லாக்டவுன் அறிவிப்பு.
இனிமேல் தாங்காது என்ற விரக்தியில் இருந்தவருக்குத் தனிக்கடைகள் திறக்க அனுமதி என்ற செய்தி சற்று நிம்மதியைத் தந்தது.
திங்கட்கிழமை கடைத் திறந்துடுவாரு ஓனருனு சொல்லி காமாட்சியைப் பார்த்துச் சிரித்தார். காமாட்சியும் பதிலுக்குச் சிரிக்க தங்கசாமி சாமியிடம் நன்றி சொல்லிமுடித்தார்.
திங்கட்கிழமை எழுந்ததும் பள்ளி மணி ஒலித்ததும் மாணவர்கள் வெளியில் ஓடுவது போல அவசர அவசரமாக சீக்கிரமாகவே கிளம்பினார்.
கடை திறந்தபாடில்லை. கடையில் வேலை செய்யும் ஒருத்தரும் வரவில்லை. தங்கசாமியையும் ஓனரையும் சேர்த்து எட்டுப்பேர் வேலை செய்யும் கடை அது. பண்டிகை காலங்களில் விற்பனை அள்ளும்.
"ஏன் யாரும் வரவில்லை. ஒருவேளை நாளை திறக்கலாம்னு நெனச்சிருக்காரா? ஊழியர்களுக்கு வேலை இல்லாத நாட்களுக்கும் சம்பளம் தரணும்னு சொல்லிருக்காங்க. அதால பேங்குக்குப் போயிருப்பாரா? போய் வீட்டுல பார்ப்போம்" என நினைத்தவாறு ஓனர் ரவி வீட்டிற்கு சென்றார்.
ரவி வாசலில் அமர்ந்திருந்தார். "வாங்க தங்கசாமி.. நானே சொல்லணும் நெனச்சிட்ருந்தேன். எல்லோருக்கும் சம்பளம் தர பணம் இல்ல. பணம் தந்துட்டா துணி சரக்கு வாங்க முடியாது. பாதி தர்லாம்னா ஒண்ணுமே விக்காம எங்கிட்டுத் தர்றது? அதான் கடையில் உள்ளதை மொத்தவியாபாரிகள்ட்ட பாதிவிலைல கொடுத்துட்டு கடைய மூடிட்டு உங்க எல்லோருக்கும் இதுவரையிலான தொகைய கொடுத்துடலாம்னு" சொல்லி முடிப்பதற்குள் தங்கசாமி சட்டென்று "வேலை இல்லாத நாட்களுக்கு உங்களுக்கு மாத்திரம் எப்படிங்க பணம் வரும்? சம்பளம் இல்லாட்டியும் கடைய மூடிடாதீங்க. நான் என்னக்கினு வரணும்னு சொன்னிங்கனா அன்னக்கி கடைக்கு வாரேன்" என்றார்.
"சரிதான் தங்கசாமி. ஆனா மனசாட்சி உறுத்துதே. பாதி சம்பளம் தரக்கூட காசு கிடையாது.. அதான் வேற வழி இல்லாம.."
"நீங்க தரணும்னு நெனச்சாலும் நான் வாங்கலீங்க. வேலை போய்ட்டா இன்னும் என் பொழப்பு மோசமாயிடும். அதுக்காச்சுமாவுது..." சற்று குரல் தழும்பியது.
"சரி யோசனை பண்றேன். கடைல உள்ள எல்லோரும் உன்னையப் போலதான் சொல்றாங்க. திரும்ப கடை திறந்தாலும் சேல்ஸ் ஆகுமானு தெரியல. ஒரு வாரம் கழிச்சுக் கூப்டுறேன்" என்றார்.
"சரிங்க.. வாரேன்" என்றப்படி நடையில் சற்று வேகத்தைக் குறைத்தப்படி நடந்தார். இன்னும் ஒரு வாரத்தை எப்படி ஓட்றதுனு தெரியல. அடுத்த திங்கட்கிழமையாவுது நல்லப்படியா கடை திறக்கணும் என்ற நெனைப்பு வந்துப்போனது.
காமாட்சிதான் பாவம். இன்றிலிருந்து ஏதேனும் கிடைத்தால் வைத்த நகையை மீட்டுவிடலாம் என நினைத்திருந்தாள். என்னச் சொல்லித் தேற்றுவதெனப் புரியாமல் குழம்பியிருந்தார் தங்க சாமி.
தங்கசாமி சென்றதும் ரவியின் மனைவி "ஏங்க.. எப்படிங்க இப்டிலாம்.. சான்ஸே இல்லீங்க. சம்பளமும் தரவேணாம். எப்போவும் இனி கேட்கவும் மாட்டாங்க. சமத்தோ சமத்து" என்றாள்.
"முதலாளின்னா சும்மாவா.. இலாபம் பார்க்கணும். எல்லா விஷயத்திலையும். அப்பதான் ஜெயிக்கமுடியும். தீபாவளி, பொங்கல்னு ஓடுன ஓட்டத்துக்கே எல்லோருக்கும் சம்பளத்தோட ஒரு சட்டை பேண்டுதான் எக்ஸ்ட்ரா கொடுத்தேன். அப்போ கூட போனஸ்னு கேட்டாரு தங்கசாமி. ரொம்ப வருசமா செய்றவர்னு கொடுத்தா மத்தவங்களுக்கும் தரணும். அப்பவே அவர்ட்ட வேலைய விட்டு நின்னுடுங்க தங்கசாமி. இவ்ளோ வயசுல பொறுமையா வேலை செய்ற உங்க சம்பளத்துக்குச் சமமா சம்பளம் கேட்குறாங்க மத்தவங்களாம். வேலையும் அதிகம் நாங்கதா செய்றோம்ங்றாங்க. இப்ப போனஸும் தந்தானு சொன்னப்பவே வேலைக்கு வாரேன் போனஸ்லாம்கூட வேணாம்ங்கன்னாரு. அதை சொல்லியே யாருக்கும் தரல " என்ற தாரக மந்திரத்தைத் தாரத்திடம் சொன்னார் ரவி.
வீட்டிற்கு சென்ற தங்கசாமி காமாட்சியிடம் "ஓனருக்கு மட்டும் காசு ஏது? அதால வேலை ஆரம்பிக்கிற அன்னிலருந்துதான் சம்பளம் தர நிலைல இருக்கேனு சொல்லி கண்கலங்குனாரு.. பாவம்" என்றார்.
பிரபல தனியார் நிறுவனம் தன் ஊழியர்களில் பாதிப்பேரை வேலை விட்டு நீக்கியச் செய்தி தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது.
"பாரு காமாட்சி.. நான் பரவால்ல.. சம்பளம் இல்லாட்டியும் வேலையாவுது இருக்குது" என்ற பெருமிதத்துடன் தொலைக்காட்சியின் சத்தத்தை அதிகரித்தார் தங்கசாமி.
.....
செ.ஆனந்த ராஜா
Sirukathai moolam pala samuga prachchanaigalai elimaiyana thamizhal arumaiyaga kaiyandamai miga sirappu. Manathai vittu maraiyatha, kangalin oorum kanneer vara vaithuvidum, kallumkapadamatra kadapathiramaga Thangasami. Hats off to the social responsibility of the writer.
ReplyDelete