"விநாயகனே வினைத்தீர்ப்பவனே..." கணேசனின் செல்போன் ஒலித்தது. தன் வீட்டிலிருந்து அழைப்பு வருவதைக் கண்டவன் அழைப்பைப் பதட்டத்துடன் ஏற்றான்.
"என்னம்மா?..." குரல் தழுதழுத்தது.
"எங்கப்பா இருக்க?..." மெல்லிய குரலில் அவன் தாய்.
"பக்கத்துத்தெரு பிள்ளையார்க் கோயில்ல இருக்கேம்மா. ஏம்மா கேக்குற?"
"உனக்கு ரிஜிஸ்டர் தபால் வந்திருக்குப்பா. நீதான் வாங்கனுமாம். உடனே வாப்பா..."
"சரி! இதோ வர்றேன்."
அழைப்பைத் துண்டித்தவன் பிள்ளையாரிடம்
"இதோ பாரு பிள்ளையாரே! கோர்ட்லேருந்துதான் தபால் வந்திருக்கும். எங்களுக்குச் சாதகமாதான் இருக்கனும்." வேண்டிக்கொண்டே ஒருவித பயத்துடன் வீட்டிற்கு கிளம்பினான்.
வீட்டிற்கு விரைவாய் வந்தவனுக்குப் பிள்ளையார் தன்னை ஏமாற்றி விடமாட்டார் என்ற எண்ணத்தோடேயே தபாலை வாங்கிப் படித்தான்.
படித்தவனுக்கு அதிர்ச்சி. அதில் "கோர்ட் உத்தரவுப்படி தாங்கள் வசிக்கும் இடம் அரசு புறம்போக்கு இடம் என்பதால் இந்தத் தபால் கிடைத்த 15 நாட்களுக்குள் இடத்தைக் காலி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று எழுதியிருந்தது.
அவன் கண்களில் கண்ணீர் பொங்கியது. ஆத்திரத்தோடு தன்னை ஏமாற்றிய பிள்ளையாரை நோக்கி விரைந்தான்.
அங்கே அவன் கண்ட காட்சி அவனைச் சற்று அமைதியாக்கியது.
சாலை விரிவாக்கப் பணிக்காக நடுத்தெருவிலிருந்த அந்தப் பிள்ளையார்க் கோயிலை அதிகாரிகள் சில ஆட்களோடு இடித்துக் கொண்டிருந்தார்கள்.
"உனக்காவது நோட்டீஸ் கொடுத்தார்கள். எனக்கு அதுவும் இல்லை" என பிள்ளையார் தன் நிலைமையை அவனுக்குச் சொல்வதுபோல் இருந்தது.
கருத்தும் எழுத்தும்
செ.ஆனந்தராஜா.