ஓயாது ஓடிக்கொண்டிருக்கும் வண்டிகள். நகரம் என்பதற்கு சான்றாக எங்கும் ஹாரன் ஒலிகள். இரு மூத்திர சுவற்றிற்கு இடையில் பளபளப்பான தார் ரோடுகள். ரோட்டின் ஒரு பக்கத்தில் மின்விளக்குக் கம்பத்தின் கீழே படுத்திருந்தான் அந்தப் பிச்சைக்காரன். அவனைப் பார்த்தாலே ஏதேனும் கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் அவனின் மெல்லிய வயிறு. எலும்புகள் எட்டிப்பார்ப்பதைத் தடுக்கும் தோல். தலைக்கும் தாடைக்கும் நீண்ட செம்பட்டை நிற முடிகள். கறையோடு கிழிந்த வேட்டி. அதை கீழே விழாதபடி பிடித்திருக்கும் அரைஞான் கயிறு. தோளில் நீண்ட பை. கையில் தட்டும் கைத்தடியும். இவையே அவனது சொத்துகள்.நீண்ட பையில் நிறைய பிளாஸ்டிக் குப்பைகள். தன்னால் உலகிற்கு நன்மை செய்யமுடியும் என நினைத்து நினைத்துப் பொறுக்கியவை அவைகள். பல சமயத்துல அவன் தனக்குத்தனே பேசிப்பான். அதனால் சில பேர் அவனைப் பைத்தியம்னு சொல்லுவாங்க.
தனக்கு மிஞ்சி தானம்னு கொடுக்கிறவங்க சில பேர் இருக்கிறாங்கங்கிறது என்பது அவன் தட்டில் சிதறியுள்ள சில்லரையைப் பார்த்தாலே தெரியும். இரண்டு ரூபாதான் அதிகபட்ச காசு, பணம் எல்லாம். தட்டைப் பார்க்கும்போதெல்லாம் தான் வறுமைக்குக் கீழ இல்லங்கிற மமதை அவனுக்கு .நமட்டுச் சிரிப்பு வேற.
பின்னே இருக்காதா.
நகரத்துல இருபத்தெட்டு ரூபாக்கு கீழ சம்பாதிக்கிறவன்தான் வறுமையில இருக்கானாம். அரசாங்கம் சொல்லுது. அவனுக்கு அது தெரியும். அதான் அந்த நமட்டுச் சிரிப்பு.
ஒருமுறை ஒருத்தன் ஏசுனது அவனுக்கு ஒருமாதியாதான் போச்சு.
"உழச்சி தின்னாம பிச்சை எடுக்குது"னு பேசிட்டான். வந்துச்சே அவனுக்குக் கோபம்
"நீ எவ்ளவுடா சம்பாதிக்கிற? எவ்ளவு சம்பாதிச்சப்புறம் பிச்சைப்போடுவ? நீயெல்லாம் எவ்ளவு சம்பாதிச்சாலும் உனக்குப் பத்தாதடா! நீ என்னவிட பெரிய பிச்சைக்காரன்டா"னு எதிர்த்துப் பேசினதிக்கப்புறம்தான் அவனுக்குத் திருப்தியாச்சு.
"நானென்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா?" தனக்குத்தானே பேச ஆரம்பித்தான்.
நேத்திக்கு அவனுக்கு இதைவிட பெரிய கோபம். பள்ளிக்கூடப் பக்கம் பிச்சை எடுக்கும்போது ஒரு வாத்தியாரு பாடம் நடத்துறத கேட்டிருக்கான். " அறம் செய்ய விரும்பு"னு சொல்லித்தராறேனு அவர்ட்ட கேட்ருக்கான்.
"சில்லறை இல்ல"ன்னு சொல்லிட்டான்.
"வேணும்னா சில்லறய என் தட்டிலருந்து பொறுக்கிக்கோ!"னு காட்டமாகவே கத்திவிட்டான் பிச்சைக்காரன்.
"யாரும் சொல்லிக்கொடுப்பது போல வாழறதில்ல.
வாழறதுக்கு ஏத்தாமாதிரி சொல்லித் தரதும் இல்ல"
அவன் வாயிலிருந்து தத்துவங்கள் உதிர்ந்தன.
உச்சி வெயில். அவன் கால்கள் நிழலைத் தேடியது. செருப்பும் இல்லியே.
" ஒருவேள எங்களுக்கெல்லாம் ஓட்டுரிமை இருந்திருந்தா, செருப்பு, தட்டெல்லாம் இலவசமா கிடச்சிருக்கும்" புலம்பல் அரசியல் பக்கம் திரும்பியதில் ஆச்சரியமில்லை.
"ஒதுங்கி நிற்க மரமும் இல்ல. இந்தக் கால்த்து அசோகரெலாம் மரத்த வெட்டுறதுலயே குறிக்கோளா இருக்கானுங்க. என்னமாதிரி அவனவன் புள்ளக்குட்டியெல்லாம் மரம், காத்து இல்லாம கஷ்டப்படப் போகுது. அப்ப நான் உசுரோட இருக்கமாட்டேன். ஆமா..மாம்.. இந்த மரணம்தான் எல்லாருக்கும் பொதுவா இருக்கு. இது இல்லாட்டி.. அய்யயோ.. நினச்சிப்பாரு. வெயில் இன்னும் கொளுத்திருக்கும்"
புலம்பிக்கொண்டே மேலே பார்த்தான். வெயில் சற்று உள்வாங்கியது.
கருத்தும் எழுத்தும் செ.ஆனந்தராஜா, மயிலாடுதுறை .